திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளயத்தைச் சேர்ந்தவர் ஜலால் (வயது 70). இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவரை மீட்ட நகராட்சி ஊழியர்கள், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் ஜலால் உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடியில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஒருவரும், அதைத்தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி ஒருவரும் உயிரிழந்த நிலையில், கடந்த 13ஆம் தேதி பொறியாளர் ஒருவரும், இன்று முதியவரும் கரோனாவால் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்ட ஜலாலின் உடல், டிவிடி சிக்னல் அருகில் உள்ள சிதம்பர நகர் மையவாடியில் மாநகராட்சி சுகாதாரக் குழுவினரால் 15 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டது. உயிரிழந்த ஜலாலுக்கு ஏற்கனவே நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல் இருந்தது குறிப்பிடத்தக்கது.