வால்பாறை அட்டக்கட்டியில் நகராட்சி சார்பில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக 3 லட்சம் ரூபாய் செலவில் சோதனைச் சாவடி கட்டடம் கட்டபட்டது. இக்கட்டடத்தை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு திறந்துவைத்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், "வால்பாறை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடர்கிறது. வால்பாறைக்கு வரும் நபர்களுக்கு இ-பாஸ் கட்டாயம். சரக்கு வாகனங்களுக்கு பில் அவசியமாகும். குளிர் பிரதேசம் என்பதால் கீழே இருந்து வருபவர்கள் மூலம் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் நகராட்சி சார்பில் அட்டக்கட்டியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.
அதன் வழியாக வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டும் ஓட்டுநர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டும் முகக்கவசங்கள் அனுப்பபடுகின்றன. மழை காலம் தொடங்கியுள்ளதால் டோபி காலனி, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்காதவண்ணம் பணிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி நெடுஞ்சாலை துறை மூலம் 27 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு மலைப்பாதை சாலையை அகலப்படுத்தியும், தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டுள்ளன" என்றார். இதில் துணை ஆட்சியர் வைத்தியநாதன், நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், தாசில்தார் ராஜா, அமீது, மயில் கணேசன், ஆய்வாளர் மகேஷ்வரி, பொறியாளர் சரவணபாபுமற்றும் சுகதாரத் துறை, வருவாய் துறையினர், மருத்துவர்கள், காவல் துறையினர் கலந்துகொண்டனர்.