திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 4 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், இரண்டாயிரத்து 648 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை, திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார், திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆயிரத்து 440 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக உள்ளது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 2) மட்டும் 164 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக, வில்லிவாக்கம் ஒன்றியம் எல்லாபுரம், திருவேற்காடு, ஆவடியில் மட்டும் 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கரோனாவிலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாகக் கழுவுதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆங்காங்கே வீடுகள் முன்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
அது மட்டுமில்லாமல், கடைகளுக்கு முன்பாக விளம்பரப் பலகைகள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவசர கால உதவி எண்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டு எண்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
வீடுகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை தினந்தோறும் பொதுமக்கள் காணும்போது, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இடங்கள் முழுவதுமாக தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். வெளியில் யாரும் வரவேண்டாம் எனவும்; அவசியம் இல்லாமல் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் இன்று 514 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன