இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகரை நேரில் சந்தித்த திமுக எம்.எல்.ஏ பூங்கோதை கோரிக்கை மனுவொன்றையும் இன்று (ஜூன் 19) அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய எம்.எல்.ஏ பூங்கோதை, "வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு ஏராளமானோர் வருகின்றனர். அவர்களில் பலர் மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் கோவிட்-19 கண்டறிதல் சோதனைகளுக்கு உள்ளாகாமல் மாற்று வழியில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதாக அறிய முடிகிறது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோவிட்-19 தொற்றுநோய் தீவிரமாக பரவிவருகிறது.
குறிப்பாக, ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து ரயில், பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு திரும்புவோரிடம் கோவிட்-19 கண்டறிதல் சோதனைகளை மேற்கொள்வது என்பது பெரும் சவாலாக இருப்பதாக மாவட்ட உயர் அலுவலர்கள் கூட சொல்லி வருகின்றனர்.
மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் வெளியூரிலிருந்து வருபவர்கள் சோதனை நடத்தும்போது 'நெகட்டிவ்' என்று முடிவு வருவதால் அவர்களை உள்ளே அனுமதித்து விடுகின்றனர். ஆனால், அப்படி உள்ளே வரும் நபர்களுக்கு ஏழு நாட்கள் கழித்து மீண்டும் கட்டாயம் இரண்டாவது முறையாக கரோனோ பரிசோதனை நடத்த வேண்டும். கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த ஒரு மருத்துவராக இதுதான் சரியான நடவடிக்கை என நான் உணர்கிறேன்.
இதை தான் மாவட்ட ஆட்சியரிடமும் நான் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளேன். அவரும் எனது கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். இரண்டாம் கட்ட பரிசோதனை நடத்தும் பட்சத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்" என அவர் தெரிவித்தார்.