திருவாரூர் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்ட சிலைகளில் முறைகேடு நடந்திருப்பதாக அகில இந்திய இந்து மகாசபா திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், ” நாகப்பட்டினம் மாவட்டம் கிடாமங்கலம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கைலாசநாதர் சுவாமி கோயிலில் இருந்த 20 சிலைகள் 1986ஆம் ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனை சிலைகள் பாதுகாப்பு மையம் செயல் அலுவலரும் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளரும் பெற்றுக்கொண்டு சான்று அளித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு சந்தேகத்தின் பெயரில் சிலையைப் பார்த்தபோது 20 சிலைகளும் சற்று மாறுபாடாக இருந்துள்ள நிலையில் இது தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் கோயில் சார்பாக விளக்கம் கேட்டும் எந்த ஒரு பதிலும் இல்லை. அதேபோல் அகில இந்திய பாரத இந்து மகாசபா சார்பில் விளக்கம் கேட்டபோது அலுவலர்கள் பதிலளிக்கவில்லை.
எனவே ஒப்படைக்கப்பட்ட கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான 20 சிலைகளையும் ஆய்வு செய்து அதில் உள்ள உண்மை தன்மையை தெளிவுபடுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.