தமிழ்நாட்டில், சென்னைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் சித்த மருத்துவ முறையில் கரோனா நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மையம் தொடக்கப்பட்டது.
இதற்காக பெரியகுளம் அருகேயுள்ள தனியார் கலைக்கல்லூரி வளாகத்தில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, கடந்த சில நாள்களாக நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றதாக இருப்பதாகக் கூறி நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று (ஜூலை28) நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, நோயாளிகளின் எண்ணிக்கை, சித்த மருத்துவ சிகிச்சை, உணவு, சுகாதாரம், அடிப்படை வசதிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம், சுவை, சுகாதாரம் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர், நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவான எள்ளு சாதம், கறிவேப்பிலை துவையல், மிளகு குளம்பு, கொன்னாங்கண்ணி கூட்டு, அவரைக்காய் பொரியல், தூதுவளை ரசம், ஐங்காய மோர் ஆகியவற்றின் தரம் குறித்து உணவருந்தி ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு சித்த மருந்து பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: மாநில அளவில் 2ஆவது இடத்தில் விருதுநகர்