ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவமனை கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது கரோனா சிறப்பு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தனி சிறப்பு வார்டிலும்; அவரது மனைவியும், கைக்குழந்தையும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அங்கு கடந்த இரண்டு நாள்களாக மருத்துவர் வருவதில்லை எனவும்; தேவையான பால், நல்ல தண்ணீர், உணவு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படுவதில்லை எனவும் அப்பெண் செல்போனில் காணொலிப் பதிவு செய்து வாட்ஸ்அப்பில் முதலமைச்சருக்கு அனுப்பி தெரிவித்திருந்தார்.
இந்தக் காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பெருந்துறை அரசு மருத்துவமனையில் நேற்று (ஜூலை 2) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் முதலமைச்சருக்கு புகார் தெரிவித்த பெண்ணைச் சந்தித்து, அவரது குறையைக் கேட்டறிந்தார்.
இதையடுத்து, அவர் தனது வாட்ஸ் புகார் காட்சிப் புகாரை ஏற்றுக் கொண்டு, அனைவருக்கும் உடனடியாக வசதி கிடைத்து வருவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இனிமேல் அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு: கைதான மூவரைச் சிறையில் அடைக்க உத்தரவு!