தென்காசி மாவட்டத்தில், கரோனா தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது மாவட்டத்தில் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், கரோனா பரிசோதனை குறித்து மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, "கரோனா தொற்று முதலில் நுரையீரலைத் தாக்குவதன் மூலம் உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து உடலின் பிற பாகங்கள் செயலிழப்பால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இந்த உயிர் இழப்பைத் தவிர்க்க தென்காசி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு அரசால் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், மாவட்டத்தில் வீடு வீடாக சென்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார, உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை, நுரையீரல் செயல்பாட்டைக் காட்டும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே அவ்வாறு வீடு தேடி வரும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதோடு முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நீண்ட நாள் உடல் உபாதைகள் உள்ளவர்கள் இந்தப் பரிசோதனை மேற்கொள்வதை அருகில் உள்ளவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.