2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் விவாதங்களும் நடைபெற்றன.
இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும்விதமாக, "2021ஆம் ஆண்டு மகத்தான வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது ஒன்றே அதிமுகவின் இலக்கு" என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில், 'எடப்பாடியாரை புறம்பேசுபவர்கள் இதைப் படித்தாவது திருந்தட்டும்' என்ற தலைப்பில் தேனி நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டி நேதாஜி சுபாஷ் சேனையினர் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
அந்த சுவரொட்டில், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள், வேளாண் சிறப்பு மண்டலம், அத்திக்கடவு - அவிநாசி நீர் திட்டம், ரூபாய் 1000 பொங்கல் பரிசு, நெகிழித் தடை, கல்வித் தொலைக்காட்சி, நடந்தாய் வாழி காவிரி நீர் திட்டம் உள்ளிட்ட 23 திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளனர்.
மேலும் அதில், 'மக்களின் முதலமைச்சர் எடப்பாடியாரை குறை கூறினால் நாக்கு அழுகி விடும்' என்றும், 'மீண்டும் எடப்பாடி... வேண்டும் எடப்பாடி...!' எனவும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுவரொட்டியில் பெரிய அளவில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் படமும் இடம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.