வாஷிங்டன்: அண்டை நாடுகளின் எல்லையில் சீனா போன்ற சர்வாதிகார நாடுகள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
இந்தியா - சீனா எல்லையான லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள பாங்காங் ஏரி அருகே சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனை தடுத்த இந்திய வீரர்களுக்கும், சீன வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னை தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. இதனால் தற்போது, சீனா எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் இதற்கு பதிலடி தரும் வகையில் தனது படைகளை குவித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
இச்சூழலில் இந்த விவகாரம் குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருவதாகவும், சர்வாதிகார ஆட்சியில் இது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி கரோனா பரவல் தொடர்பான உண்மைகளை மறைத்துள்ளதோடு ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவர்கள் அண்டை நாடுகளில் அறிவுசார் சொத்துக்களை திருடுவதோடு, தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளனர் என குற்றஞ்சாட்டினார். மேலும் சீனாவின் இந்த சர்வதிகாரப் போக்கு ஹாங்காங் மட்டுமின்றி, உலக நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், இதனை கட்டுப்படுத்தும் திறன் அமெரிக்காவிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.