கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவருக்கும், ஸ்ரீமுஷ்ணம் அருகேயுள்ள இனமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதன்படி, இன்று விருத்தாச்சலம் மணலூரில் உள்ள கோயிலில் சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக சமூகநலத் துறை அலுவலருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சைல்டு லைன் ஆலோசகர் பார்த்திபராஜ், ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினர் இனமங்கலம் கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அச்சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை எனத் தெரியவந்தது.
இதையடுத்து, சமூகநலத் துறை அலுவலர் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது, மீறி சிறுமிக்கு திருமணம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
பின்னர் இது தொடர்பாக மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் சிறுமியின் உறவினர்கள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் குழந்தைத் திருமணம் குறித்து தகவல் தெரியவந்தால், சைல்டு லைன் எண் 1098 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் கோரிய வழக்கு தள்ளுபடி!