தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு அலுவலகங்களுக்கான புதிய கட்டடங்கள் கட்டுமான பணிகள் 2018ஆம் ஆண்டு ரூ.6.20 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது.
தேனி மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 28 ஆயிரத்து 900 சதுர அடி பரப்பளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகிய அலுவலகத்திற்கான அலுவலர்கள் அறை, உதவி திட்ட அலுவலர்கள், செயற்பொறியாளர், கண்காணிப்பாளர், கூட்டரங்கம், பதிவேடுகள் பராமரிக்கும் அறை உள்ளிட்ட அலுவலகங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்தப் புதிய கட்டடத்தை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில், காணொலிக் காட்சி மூலம் சென்னையிலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் கலந்துகொண்டு விளக்கவுரை ஆற்றினார்.
அரண்மனைப்புதூர் ஊராட்சிக்குள்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் செயல்பட்டுவரும் மல்லிகை மகளிர் சுய உதவிக்குழு பயனாளிகள் நன்றியுரை தெரிவித்தனர்.
மேலும் இதில் கம்பம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜக்கையன், திட்ட இயக்குநர் திலகவதி உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.