மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள பீமா கோரேகன் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு சமூகத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்தது. இது குறித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரித்து வந்தது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி மனித உரிமை செயல்பாட்டளரும், பாதிரியாருமான ஸ்டான் சுவாமியை என்.ஐ.ஏ அலுவலர்கள் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஸ்டான் சுவாமியின் கைதைக் கண்டித்து திண்டுக்கல்லில் உள்ள புனித வளனார் பேராலய வளாகத்தில் திண்டுக்கல் மறைமாவட்ட கத்தோலிக்க சங்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய இயேசு சபை தலைவர் மதுரை மறை மாநில தலைவர் டேனிஸ் பொன்னையா, "மனித உரிமைப் போராளியும், சமூக செயற்பாட்டாளருமாக இருந்த ஸ்டான் சுவாமி ஆதிவாசி மக்கள் நலனுக்காக தொடர்ந்து உரிமை குரல் கொடுத்தவர்.
குறிப்பாக ஆதிவாசி மக்களிடம் இருந்து நிலங்களைத் திருடும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகப் போராடியவர். என்.ஐ.ஏ கூறுவது போல் பீமா கோரேகான் வன்முறைக்கும் ஸ்டாமி சுவாமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு மாவோயிஸ்டுகளுடன் எந்தவித தொடர்பும் இல்லை. இது முற்றிலும் பொய்யாக புனையப்பட்ட வழக்கு. இதனை கத்தோலிக்க சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
அவரையும் அவரோடு சேர்ந்து கைது செய்யப்பட்ட 15 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். விடுதலை செய்யப்படாத பட்சத்தில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என்று கூறினார்.