நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் திமுக கட்சியின் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு நிர்வாகியாக உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு மாரியப்பன் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனது அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மாரியப்பனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். பலத்த காயமடைந்த மாரியப்பனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் மாரியப்பனிடம் நெல்லை சந்திப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், “திமுக பகுதி செயலாளர் சுப்பிரமணியன், அவரது கூட்டாளிகளான சந்திரன், பாலகணேஷ் ஆகியோர் மீது தனக்கு சந்தேகம் உள்ளது. சுப்பிரமணியன் தூண்டுதலின் பேரில்தான் என்னை யாராவது தாக்கி இருக்கலாம்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து பார்த்ததில் ஒருவர் கையில் இரும்பு கம்பியுடன் ஓடியது பதிவானது.
அந்த நபர் மாரியப்பன் புகாரில் குறிப்பிட்டிருந் பாலகணேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தற்போது பாலகணேஷ் , சுப்பிரமணியன், சந்திரன் ஆகிய 3 பேர் மீது கூட்டு சதி, பொது இடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல்(294 b, 324, 506(2), 120 B ) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது திமுக பிரமுகர் சுப்ரமணியன் தூண்டுதலின் பேரில்தான் மாரியப்பனை பாலகணேஷ் தாக்கி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபரும் குற்றவாளியும் ஒரே கட்சியில் இருப்பதால் முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.