பெரியார் சிந்தனையாளர்களுக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகவே கருத்து மோதல் ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்திற்குட்பட்ட அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்தும், கந்த சஷ்டி குறித்தும் அவதூறு பரப்பியதாக புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் அன்னூர் காவல்துறையினர், முகநூலில் பதிவிட்ட சண்முகநாதன் என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(a),295(a) மற்றும் 505(2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், அதே காவல் நிலையத்தில் ஹேர் லைன்ஸ் நந்தா என்ற முகநூல் பெயரில் உள்ள நந்தா என்பவர் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்டதற்கு அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறு புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தாமதப்படுத்தியதை அடுத்து, கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் புகாரின் மீது சமமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர். இதனையடுத்து அன்னூர் காவல்துறையினர் ஹேர் லைன்ஸ் நந்தா மீதும் அதே மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.