நேற்று கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டுக் காவல் துறையினரின் இனவெறியைக் கண்டித்து என்.டி.பி. உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். அப்போது, அவையிலிருந்த அனைவரும் அதனை ஆதரித்த நிலையில் பிளாக் கியூபெக்கோயிஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) அலைன் தெர்ரியன் மட்டும் அதனை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.
அலைனின் நிலைப்பாட்டை விமர்சித்த மற்றொரு எம்பி ஜக்மீத் சிங், அவரைப் பார்த்து நீங்கள் ஒரு இனவெறியர் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து இந்தக் கருத்தைக் கண்டித்த சபாநாயகர் அந்தோனி ரோட்டா அவரை நாடாளுமன்றற நடவடிக்கையிலிருந்து ஒருநாள் நீக்கம் செய்வதாக அறிவித்து, அவையிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இதுதொடர்பாக சிபிசி வானொலியின் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது ஜக்மீத் சிங், "ராயல் கனட மவுண்டட் காவல் துறையில் இனவெறி நிலைத்திருக்கிறது. அதனைக் கண்டித்து, அம்பலப்படுத்தும் ஒரு தீர்மானத்தை என்டிபி கொண்டுவந்தது. அதை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்த்தால் அவர் இனவெறிக்கு ஆதரவாகச் செயல்படுபவர் என்று தானே அர்த்தம்.
எனவே தான் நான் அவரைப் பார்த்து நீங்கள் ஒரு இனவெறியர் எனச் சொன்னேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்டால் அது இனவெறியை எதிர்த்ததற்காக நான் மன்னிப்பு கேட்டதாக மாறும். நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்றார்.