தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகரில் கடந்த 22ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. பேராவூரணி பழைய பேருந்து நிலையம் எதிரே செல்போன் கடை நடத்திவருபவர் கணேசன் (35). இவர் ஊரடங்கால் கடையை மூடிவிட்டுச் சென்ற நிலையில், நேற்று காலை கடைவீதி பக்கம் வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே உள்ளே சென்று பார்த்தபோது, புதிய மற்றும் பழுது பார்ப்பதற்காக வைத்திருந்த 17 செல்போன்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன செல்போன்களின் மதிப்பு 55 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தில் கணேசன் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.