டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் பாய்ஸ் லாக்கர் ரூம் என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இந்தக் குழுவில் உள்ள மாணவர்கள் தங்களின் வகுப்பு தோழிகள் மற்றும் சிறார்களின் நிர்வாண படங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதுடன் படங்களுக்கு மதிப்பெண்ணும் வழங்கி வந்துள்ளனர்.
மேலும், பெண்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்வது குறித்தும் தங்களுக்குள் பேசிவந்ததுள்ளனர். இதனிடையே இவர்கள் தங்களுக்குள் வைத்திருந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் தெற்கு டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மூலம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி பெரும் விவாதத்திற்குள்ளானது.
இதனையடுத்து, தொழில்நுட்ப பிரிவு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ், அந்த இன்ஸ்டாகிராம் குழுவின் நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அந்த குழு குறித்த ஸ்கிரீன் ஷாட்டுகளை வெளியிட்ட பெண், தனக்கு சமூக வலைதளங்களில் தொடர் மிரட்டல்கள் வருவதாகக் கூறி, டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய காவல் உயர் அலுவலர், பாய்ஸ் லாக்கர் ரூம் பற்றிய செய்தியைப் பகிர்ந்துக்கொண்டதால் தனக்கு, சமூக ஊடகங்களில் "அச்சுறுத்தல்கள், அருவருப்பான குறுஞ்செய்திகள்" வருவதாகக் கூறி அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் டெல்லி சைபர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.