திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நேரு நகர் பகுதி, குப்பநத்தம் சாலையில் தனது சொந்த வேலைக்காக பரமனந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி (50), மாணிக்கம் (60) ஆகிய இருவரும் செங்கம் நோக்கி வந்தனர். மேலும் செங்கத்தில் இருந்து குப்பநத்தம் தொட்டி மடுவு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது நேரு நகர் அருகே இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
சாலையில் விழுந்து கிடந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்ட போது ஆம்புலன்ஸ் ஏதும் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்தவர்கள், பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு விரைந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரித்ததில், குப்பநத்தம் தொட்டிமடுவு பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் மது போதையில் அதிவேகமாக தனது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து எதிரே வந்த நபர்கள் மீது மோதியதில் விபத்து நடந்ததாகத் தெரியவந்துள்ளது.