நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுகாவில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் பல்வேறு பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், அமல்படுத்தியுள்ள ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்ததால், பொதுமக்கள் இயல்பான நிலைக்குத் திரும்பினர்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. அந்தவரிசையில் சீர்காழி பகுதியில் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், சீர்காழியில் உள்ள தனியார் வங்கியில் உள்ள ஊழியர்கள் 4 பேர் பரிசோதனை செய்யப்பட்டதில், இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறையினர் வங்கி, ஏ.டி.எம் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். தொற்று ஏற்பட்ட இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வங்கி இயங்கி வந்த கீழ்தளத்தை மட்டும் சீல் வைத்தனர். வங்கியின் மேல் இரண்டு தளங்கள் வழக்கம் போல இயங்கி வருவதால், கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் மற்ற கட்டடங்களையும் மூட பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.