கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வந்த இவர், புதுச்சேரியைச் சேர்ந்த காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பிறகு புதுச்சேரியில் வசித்து வந்த நிலையில், தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ராஜேஷ்குமார் தனியாக இருந்து வந்தார். பின்னர், மைத்துனர் செல்வராஜ் இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், புதுச்சேரி திருக்கனூர் அருகே இன்று காலை ராஜேஷ் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த திருக்கனூர் காவல் துறையினர், ராஜேஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தலைமறைவான மைத்துனர் செல்வராஜ் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.