உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. சவுதாம்ப்டனில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 263 ரன்கள் இலக்குடன் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியில், கேப்டன் குல்பதீன் நைப், ரஹ்மத் ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி 49 ரன்களை சேர்த்த நிலையில், ரஹ்மத் ஷா ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹஷ்மத்துல்லாஹ் ஷஹிடியும் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்ட, குல்பதீன் நைப், அஸ்கர் ஆஃப்கானுடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில், அஸ்கர் ஆஃப்கான், ஷகிப் பந்துவீச்சில் அவுட் ஆனார். இதையடுத்து, முகமது நபியும் ஷகிப் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இதன்பிறகு, ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள், வங்கதேச அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் 47ஆவது ஓவரின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சமியூல்லாஹ் ஷின்வாரி 49 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச அணி தரப்பில் ஷகிப் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போட்டியில், 51 ரன்கள், ஐந்து விக்கெட்டுகள் என வங்கதேச அணியின் வெற்றிக்கு துணையாக இருந்த ஷகிப் ஆட்டநாயகன் விருதை வென்றார்.