கரோனா ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக செல்பவர்கள் இ-பாஸ் பெற்றால் மட்டுமே செல்ல முடியும். அனைத்து காரணங்களுக்காகவும் இ-பாஸ் வழங்கப்படுவது கிடையாது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அனைத்து வாகன ஓட்டுநர்கள் திருச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே சில நாள்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன் பின்னரும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படவில்லை. வாகனக் கடன் தவணை செலுத்த முடியாமலும், குடும்பத்தை நடத்த முடியாமலும் ஓட்டுநர்கள் சிலர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஓட்டுநர்களின் இறப்பிற்குப் பிறகும் மவுனம் காட்டும் தமிழ்நாடு அரசு, ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணைத் தொகை செலுத்த கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்.
வட்டி விகிதத்தை ரத்து செய்ய வேண்டும், ஆர்டிஓ சம்பந்தப்பட்ட ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அனைத்து வாகன ஓட்டுநர்களும் தூக்கு மாட்டி இன்று (ஆகஸ்ட் 12) போராட்டத்தில் ஈடுபட்டனர்.