சென்னை - போரூர் அடுத்த மவுலிவாக்கம் பகுதியில் ஐடிபிஐ, கனரா வங்கியின் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் (ஏடிஎம் மெஷின்கள்) உள்ளன. இன்று (ஜூலை 15) அதிகாலை தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் உடைக்கப்படுவதாக, வங்கி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை அடுத்து, ரோந்துப் பணியில் இருந்த மாங்காடு காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் அங்கு சென்றனர்.
பின்னர் காவல் துறையினர் வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காவல் துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறிது நேரத்தில், மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரமும் அடையாளம் தெரியாத நபர்களால், உடைக்கப்பட்டது. இதையடுத்து அலாரம் சத்தம் கேட்டதை அடுத்து, காவல் துறையினர் அங்கு சென்றனர். அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தானியங்கி பணம் எடுக்கும் மையங்களில் உள்ள பணம் இருக்கும் அறையை உடைக்க முடியாததால், பணம் தப்பியது. ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்களை உடைத்து, அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.