கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல்துறை சரகத்திற்கு உள்பட்ட வெள்ள கேட் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது.
இது குறித்து பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர்.
இதில் இருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சிப்பது தெரியவந்தது. இந்தத் காட்சியின் அடிப்படையில் காவலர்கள் விசாரணை நடத்தியதில், நெல்லிக்குப்பம் அருகே உள்ள எய்தனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகன் விக்கி என்ற விக்னேஷ் (25) கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைதுசெய்து காவலர்கள் விசாரித்தனர். அப்போது அவர் வண்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் என்பவருடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்நிலையில் விக்னேஷிடமிருந்து கொள்ளையடிக்க பயன்படுத்திய கத்தி, கடப்பாதை ஆகிய ஆயுதங்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அருளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குற்றப் பின்னணி கொண்ட தூத்துக்குடி காவல் ஆய்வாளர்: அம்பலமான பகீர் தகவல்!