மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகவும், திமுகவை கண்டித்தும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று (செப்டம்பர் 10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "திமுக திட்டமிட்டு இந்தி மொழியை புறக்கணிப்பது போல் வேடமிடுகிறது. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை திணிக்கிறார்கள். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை தொடங்கியுள்ளோம். திமுக நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கு விரைவில் இந்து மக்கள் கட்சி சார்பில் பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாட்டில், இருமொழி கொள்கைதான் கடைபிடிப்போம் என கூறியுள்ள தமிழ்நாடு அரசு, ஸ்டாலின், துரைமுருகன் நடத்தும் பள்ளிகளை மூட வேண்டும். இல்லையென்றால், அரசுக் கல்வி திட்டத்திலும் மும்மொழி கொள்கை கொண்டு வரவேண்டும். மும்மொழி கல்வியை அரசியலாக்கும் திட்டம் வரும் தேர்தலில் பலிக்காது.
திமுக பொதுக் குழுவில் துரைமுருகன் இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றி கூறும்போது, பட்டப்படிப்பை தமிழில் தொடர்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். இதன் முன்னோட்டமாக அவர் வேலூரில் நடத்தும் பள்ளியில் இந்தி மொழி கல்வியை நிறுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.