சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளருமான வீரபாண்டி எஸ். கே.செல்வத்தின் மூத்த மகள் திருமணம் இன்று(ஜூலை 2) சேலம் மாவட்டம் பேளூர் அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்தத் திருமண விழாவில் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர் . கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் ஏராளமான உறவினர்கள் அரசியல் கட்சியினர் திரண்டதால் இட நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு மணமக்களுக்கு அச்சதை தூவினர்.
![Marriage function](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12:02:00:1593671520_tn-slm-01-skselvam-ammk-pic-script-7204525_02072020071547_0207f_1593654347_56.jpg)
கரோனா தொற்று ஊரடங்கு உத்தரவு காலத்தில் அரசு பல்வேறு அறிவிப்புகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ஆனால் அறிவிப்புகளை, அரசின் உத்தரவுகளை மதிக்காமல் காற்றில் பறக்கவிட்டு, தனது மகள் திருமண நிகழ்வை எஸ்.கே.செல்வம் நடத்தியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இல்லத் திருமண விழாவில் மணமகன், மணமகள் உள்பட ஒருவர்கூட முகக்கவசம் அணியாமல் கூடியிருந்தனர். இதனால் கரோனா நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என பேளூர் மக்கள் பீதியில் உள்ளனர்.