இந்த முதலீட்டுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவுபெற்றால் ஏர்டெல் நிறுவனத்தில் அமேசான் தோராயமாக 5 விழுக்காடு பங்குகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெலுக்கு 30 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
மறுபுறம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவில் அமெரிக்க பெருநிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் ஃபேஸ்புக், கேகேஆர், சில்வர் லேக், ஜெனரல் அட்லாண்டிக், விஸ்டா ஈக்விட்டி ஆகிய நிறுவனங்களிடமிருந்து ஜியோவுக்கு சுமார் 1000 கோடி டாலர் முதலீடு கிடைத்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோவில் 9.9 விழுக்காடு பங்குகளை வாங்கியுள்ளது. மேலும், சில்வர் லேக் நிறுவனம் 1.15 விழுக்காடு பங்குகளையும், விஸ்டா ஈக்விட்டி நிறுவனம் 2.23 விழுக்காடு பங்குகளையும், ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் 1.34 விழுக்காடு பங்குகளையும், கேகேஆர் நிறுவனம் 2.23 விழுக்காடு பங்குகளையும் ஜியோவில் வாங்கியுள்ளன.
இதுமட்டுமல்லாமல் 200 கோடி டாலர் செலவில் ஜியோவில் 2.5 விழுக்காடு பங்குகளை வாங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவில் பெரும் ஜாம்பவானாக திகழும் அமேசான் நிறுவனம், ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்களின் தொழில் போட்டி இந்திய களத்தில் சூடுபிடிப்பதும் கண்கூடாகத் தெரிகிறது.