கோவிட்-19 பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 10,11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு இந்த மாதத்தின் இரண்டாம் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் நடைபெறவுள்ளது.
தேர்வெழுத உள்ள மாணவர்களின் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்கும் பணி மற்றும் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பணி ஆகியவை நாளை மறுநாள் முதல் (ஜூன் 9ஆம் தேதி) நடைபெறவிருப்பதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணியாற்றும், அனைத்து வகை ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது .
அதன்படி, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பணியிலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோரும் பணிக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுக்காக பள்ளி அறைகளைப் பயன்படுத்துவதற்கு வசதியாகவும் தூய்மைப்படுத்தி, தயார் நிலையில் வைக்க அனைத்து வகைப் பள்ளிகளும் நாளை (ஜூன் 8) திறக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவைப் பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், தலைமையாசிரியர்களுக்கு இது தொடர்பாக உத்தரவுகளை வழங்கியுள்ளனர்.
பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கரோனா அறிகுறி ஏதாவது இருக்கிறதா? காய்ச்சல், இருமல், சளி ஆகிய பிரச்னை இருக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான அறிவுறுத்தல்களும் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிட்-19 அறிகுறிகள் உள்ள மாணவர்கள் குறித்த விவரங்களும் தனியாக கணக்கெடுப்பு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.