புதுச்சேரி மாநில அதிமுக சட்டப் பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ நேற்று (செப்.23) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"காணொலிக் காட்சி மூலம் தமிழ்நாட்டில் அரசியல் நடத்தும் திமுக தலைவர் ஸ்டாலின், வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதைத் தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தான் ஒரு மாநில முதலமைச்சர் என்பதை மறந்து இவரும் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசின் தவறான விவசாயக் கொள்கை முடிவால் விவசாய நிலங்களே காணாமல் போய், தற்போது வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் பொதுமக்கள் கூடுவது, தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காதது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து, அச்சட்டத்தை மீறும் திருமண மண்டபங்கள், கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய முதலமைச்சரே இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆட்சியில் இருந்து கொண்டு விவசாயிகள் நலனிற்கு எதிராக செயல்படும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, அல்லும் பகலும் அயராது விவசாய நலனிற்காக செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சரைப்பற்றி குறை கூற எந்தத் தகுதியும் இல்லை.
புதுச்சேரியில், ஆளும் அரசின் அலட்சியத்தால் சமூகப்பரவலாக மாறியுள்ள இக்கொடிய கரோனா சூழ்நிலையில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அரசியல் ஆதாயத்திற்காக வரும் 28ஆம் தேதி போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சரின் போராட்ட அறிவிப்பு என்பது சட்டப்படி குற்றச் செயலாகும். எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் ஆளும் கட்சியினரால் நடத்தப்படவிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு, இயற்கை பேரழிவு மேலாண்மைச் சட்டம், தொற்று நோய்கள் சட்டம் (1897) ஆகியவற்றின்படி தடை விதிக்க வேண்டும்.
மீறி போராட்டம் நடத்தும் சூழ்நிலை உருவானால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் துணை நிலை ஆளுநருக்கு அதிமுக சார்பில் கடிதமும் அனுப்பப்படும்.
இவ்விவகாரத்தில், துணை நிலை ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.