கோவை டாடாபாத் பகுதியில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமரின் விபத்துக் காப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியபோது 'விபத்து காப்பீட்டுத் திட்டம் என்றால் என்ன என்று அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எடுத்துரைத்தோம். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 12 ரூபாய் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். விபத்து ஏதேனும் ஏற்பட்டால் 45 நாட்களுக்குள் இரண்டு லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் திட்டத்தில் கிடைக்கும். நீங்கள் இதனை மக்கள் அனைவரிடமும் தெரியப்படுத்த வேண்டும்.
பாரத பிரதமர் நாட்டு மக்களுக்காக இது போன்ற பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டத்தை முதலில் ஆட்டோ ஓட்டுநர்களைக் கொண்டு செயல்படுத்தி உள்ளோம். ஆட்டோ ஓட்டுநர்கள் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் அனைவருக்கும் தெளிவுபடுத்தி மக்கள் அனைவரும் பயனடையச் செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி தந்தை பெரியார் சிலையின் மீது காவி நிறத்தை ஊற்றியது கண்டனத்திற்குரியது. மேலும் இந்து கடவுளை கொச்சைப்படுத்தி வரும் அந்த யூ - ட்யூப் சேனல் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக காவல் துறை கைது செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.