திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட மாகறல் ஊராட்சியை சேர்ந்த பொன்னியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் கோவிந்தன்,ரேவதி தம்பதி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ரேவதி அம்மன் குளம் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆடுகளை ஓட்டிச் சென்ற ரேவதி தாழ்வாக சென்ற மின்சாரக் கம்பியில் கழுத்துப்பகுதி மாட்டிக்கொண்டதால் அலறி துடித்துக் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் தேவி தலைமையிலான காவலர்கள் அங்கு வந்தனர். அப்போது, பொதுமக்கள் இப்பகுதியில் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் கால்நடைகள் இறந்து போகும் சம்பவம் நடைபெற்றது வருகிறது.
இந்த மின்சாரக் கம்பிகளை சீரமைக்க கோரி பல்வேறு துறை அலுவலர்களுக்கு புகார் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மின்வாரிய அலட்சியத்தால் அடிக்கடி நடக்கும் இந்த விபத்துக்கு உரிய நடவடிக்கையும் நஷ்ட ஈடும் வழங்கும் வரை உடலை எடுக்க கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.