கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் வாயில் காயமடைந்த நிலையில் சுற்றிவந்த மக்னா யானை நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தது. பின்னர் மருதமலை, கல்வீரம்பாளையம், காளப்பநாயக்கன்பாளையம் வழியாக கணுவாய் வந்தது. அப்போது சாலை ஓரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் படுத்திருந்த கட்டட தொழிலாளி நாகராஜ் என்பவரை காலால் தட்டிவிட்டு சென்றது.
இதையடுத்து, அங்கு வந்த வனத்துறையினர் அவரை மீட்டு உடலில் ஏதேனும் காயம் அல்லது பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து விசாரித்தனர். அப்போது, அவரது உடல்நிலை சீராக இருந்ததால் வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று (ஆக.31) காலை கோயில் வளாகத்தில் படுத்திருந்த நாகராஜ் நீண்ட நேரமாகியும் எழாமல் இருந்ததால் அருகில் இருந்தவர்கள் போய் பார்த்த போது அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், "நேற்று இரவு அந்த வழியாக யானை வந்தபோது கோயில் வளாகத்தில் சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாரையும் யானை தாக்கவில்லை அந்த வளாகத்திற்குள் யானை சென்றதால் பலர் அச்சமடைந்தனர்.
தொடர்ந்து, அவர்களை ஆசுவாசப்படுத்தி விட்டு யானையை விரட்ட ஊழியர்கள் சென்றுவிட்டனர். இன்று காலை நாகராஜ் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
உடற்கூறாய்வு முடிவில்தான் யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தாரா, அல்லது யானை பயத்தில் உயிரிழந்தாரா என்பது தெரியவரும்" எனக் கூறினார்.