சேலம் மாவட்டம், வலசையூர் அடுத்த சுக்கம்பட்டி காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் சித்தமலை. இவர் கூலி தொழில் செய்துவருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சித்தமலை நாள்தோறும் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது மது அருந்திவிட்டு வருவது வழக்கம்.
மதுபோதையில் அவர் குடும்பத்தினருடனும் அக்கம்பக்கத்தினருடனும் சண்டையிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரின் இரண்டாவது மகன் பெரியசாமியிடம் நேற்று இரவு , வழக்கம் போல் மதுஅருந்தி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெரியசாமி, தந்தை சித்தமலையை நாற்காலியை கொண்டு சராமரியாக தாக்கியுள்ளார் .
அதில், படுகாயமடைந்த சித்தமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீராணம் காவல் துறையினர் சித்தமலையின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பெரியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.