கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள தென்னம்பாளையம் வரப்பிள்ளையார் கோயில் அருகே சூலூர் காவல் துறையினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அவர் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அந்த நபரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் திண்டுக்கல் மாவட்டம் குட்டாத்துப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (28) என்பதும், இவர் தேனி பகுதியில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கிவந்து கோவையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அவரிடமிருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.