இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர், ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் வீரரான யுவராஜ் சிங், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால், சச்சின், சேவாக் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் இவரை பாராட்டிவருகின்றனர்.
அந்த வகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர் தனது யூ ட்யூப் சேனலில் இவரை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"யுவராஜ் சிங்கை போன்ற ஒரு இடதுகை பேட்ஸ்மேன் இந்திய அணியில் இருந்ததே இல்லை. அவர் ஒரு ராக் ஸ்டார், மேட்ச் வின்னர், எனக்கு நல்ல நண்பரும் கூட. 2003 உலகக் கோப்பை தொடரில்தான் அவருக்கு எதிராக பந்துவீச வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் அவர் நேர்த்தியாக பேட்டிங் செய்தார். அவர் மிகவும் அசால்ட்டாக ஷாட் ஆடும் திறன் கொண்டவர். தனது நாட்டிற்காக அவர் தந்த பங்களிப்பு அளப்பரியது.
ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சில் தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்தது போன்ற ஆட்டத்தை நான் இதுவரையும் பார்த்தே இல்லை. இதைத்தவிர, 2011 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்றது எல்லாம் எப்போதும் பேசப்படும். உங்களது அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு யுவராஜ் சிங், "உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் ஒவ்வொரு முறை பந்துவீச ஓடிவரும்போது எனக்கு பயமாகவே இருக்கும். தைரியத்துடன்தான் உங்களது பந்துவீச்சை எதிர்கொண்டேன். நம் இருவருக்கு இடையே ஏராளமான சிறந்தப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்த தருணங்கள் எப்போதும் இனிமையானவை" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார். தற்போது இணையதளத்தில் இருவரும் மாறிமாறி அன்பை பகிர்ந்துக் கொண்ட சம்பவம் வைரலாகிவருகிறது.