தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருச்சி மாவட்டம், வளநாடு அருகே கடந்த பதினைந்து நாள்களுக்கு முன்னர் 70 வயது முதியவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த முதியவர், இன்று, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து முதியவர் வசித்து வந்த பகுதி தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் உட்பட பலரும் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மணப்பாறை பகுதியில் மேலும் நான்கு பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நான்கு பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மணப்பாறை பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ள நிலையில் வையம்பட்டி பகுதியில் ஏழு பேருக்கும், துவரங்குறிச்சி, வளநாடு பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனா: ரூ. 12 ஆயிரம் கோடியை ஒதுக்க மத்திய அரசை வலியுறுத்தும் பாமக!