கரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவைச் சோ்ந்த பலா் நாடு திரும்ப முடியாமல் குவைத்தில் சிக்கித் தவித்தனா். அவா்களில் பலா் முறையான விசா இல்லாமல், சுற்றுலா விசாவில் சென்று குவைத்தில் தங்கியவர்கள். சிலா், விசா காலாவதியாகி "ஓவா்ஸ்டே" ஆகியிருந்தவர்கள். ஆந்திரா அரசு, மத்திய அரசிடம் முறையிட்டு, அதன்மூலம் குவைத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலர்களுக்கு எமா்ஜென்சி சான்றிதழ் வழங்கி இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்தனா்.
அதன்படி, குவைத் நாட்டில் இருந்த ஆந்திராவைச் சேர்ந்த 581 பேர், இரண்டு ஏா் இந்தியா சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர். முதல் விமானம் நேற்று (ஜூன் 13) அதிகாலை 2 மணிக்கும், அடுத்த விமானம் இன்று (ஜூன் 14) காலை 6.30 மணிக்கும் சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தன.
அதன்பின், அவா்களுக்கு குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடந்தன. பயணிகள் அனைவரும் ஆந்திராவைச் சேந்தவா்கள் என்பதால், கரோனா மருத்துவ பரிசோதனைகள் அம்மாநிலத்தில் தான் நடைபெறும் என்று அலுவலர்கள் கூறினர். இதையடுத்து, அவர்கள் அனைவரும் 24 தனி பேருந்துகள் மூலம் ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.