புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.
இச்சூழலில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள ஏழு பணி மனைகளில் 390 பேருந்துகள் உள்ளன. அதில், 190 பேருந்துகள் இயக்குவதற்கு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் திட்டமிட்டனர்.
அதன்படி, இன்று முதல் 150 பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகுந்த இடைவெளி விட்டு பயணிகளை அமர வைப்பதற்கு ஏதுவாக இருக்கைகளில் வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு பேருந்தில் 30 பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்வதற்கு அனுமதி.பு துக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்துகள் காலை 6 மணி முதல் இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், பேருந்துகள் இயக்கப்படும் விதம் குறித்தும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி பேருந்து நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் 50 விழுக்காடு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் முகக்கவசம் அணிந்து ஏறும் பயணிகள் மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல், பேருந்துகள் இயக்குவதற்கான விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. அதன்படி, பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பேருந்துகளை கண்காணிப்பதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர், காவல் துறை, வருவாய் துறையினர் ஆகியோர் இணைந்த கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவ்வாறு விதிமுறைகளை மீறும் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும்"என்றார்.