கோவை ஆலாந்துறை காவல் நிலைய சரகம் கல்லாறு அருகில் ஜூலை 18ஆம் தேதி காரில் அதிமுக கொடியை கட்டிக்கொண்டும், காரின் பின்புறம் போலியாக ஊடகம் என்று எழுதிக்கொண்டும் நான்கு பேர் குடிபோதையில் இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வனக்காப்பாளர் நேரு தாஸ், அவர்களைப் பார்த்து இங்கே யானை நடமாட்டம் உள்ளதாகவும் எனவே உடனடியாக இந்த இடத்தை விட்டுச் செல்லுமாறும் கூறியுள்ளார்.
ஆனால், அந்த நான்கு பேரும் அரை மணி நேரம் கழித்துதான் செல்வோம் என்று கூற இரு தரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் அந்த நான்கு பேரிடமும் ஏன் சண்டை போடுகிறீர்கள் என்று கேட்டதில் பொதுமக்களுடனும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனவே நான்கு நபர்களையும் போளுவாம்பட்டி வனசரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனக்காவலர்கள் விசாரித்தனர்.
அப்போது அந்த நான்கு பேரின் பெயர்கள் அருண்பிரசாத் ( திமுக ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்), ராஜேஷ்(அதிமுக உறுப்பினர்), அருண்குமார், பாபு என்று தெரியவந்தது. அதுமட்டுமின்றி இவர்களில் யாரும் ஊடகத்துறையினர் இல்லை என்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி வனக்காப்பாளர் ஹரிதாஸ் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில் நேற்று அவர்கள் பிணையில் வெளியே வந்தனர்.