குவைத்திலிருந்து 177 இந்தியா்களுடன் தனியாா் சிறப்பு மீட்பு விமானம் நேற்று(ஜூலை 7) இரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. அவா்கள் அனைவரும் குவைத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியா்கள். அவா்களை அந்த நிறுவனமே இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தனி விமானத்தில் அழைத்து வந்தது. அவா்களுக்கு சென்னை விமானநிலையத்தில் இலவச மருத்துவப் பரிசோதனைகள், அரசின் இலவச தங்குமிடங்கள் தரப்படவில்லை. எனவே, அவா்கள் அனைவரும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர தங்கும் விடுதிகளுக்கு, தனிப் பேருந்துகளில் அனுப்பப்பட்டனா். அவா்கள் தங்கியுள்ள விடுதிகளில் தனியாா் மருத்துவக் குழுவினா் மருத்துவப் பரிசோதனைகளை நடத்துவாா்கள்.
அபுதாபியிலிருந்து ஏா் இந்தியா சிறப்பு மீட்பு விமானம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு 167 பயணிகளுடன் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 121, பெண்கள் 32, சிறுவா்கள் 13, குழந்தை1. அவா்களை அரசு அதிகாரிகள் வரவேற்ற பின்பு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் இலவச தங்குமிடங்களான தண்டலம் தனியாா் மருத்துவக் கல்லூரி விடுதிக்கு 76 பேரும், கட்டணம் செலுத்தும் தங்கும் விடுதிக்கு 91 பேரும் தனித்தனி பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனர்.
கென்யா நாட்டில் உள்ள நைரோபி நகரிலிருந்து ஏா் இந்தியா அலையன்ஸ் சிறப்பு மீட்பு விமானம் 27 இந்தியா்களுடன் டில்லி, ஹைதராபாத் வழியாக இன்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்தது. அவா்களில் ஆண்கள் 17, பெண்கள் 8, சிறுவா் 2. அவா்களை அரசு அதிகாரிகள் வரவேற்றனா். பின்பு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களில் 8 போ் இலவச தங்குமிடங்களான தண்டலம் தனியாா் மருத்துவக் கல்லூரிக்கும்,19 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான விடுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.