கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பிரகாசம் நகரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் காசிமணி. இவர், நேற்று (ஏப்.23) குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த தம்பதிகள் மீது மயக்க மருந்து தெளித்தனர். பின்னர், பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், பணம் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.
காசிமணி, அவரது மனைவி அன்னலட்சுமி காலையில் எழுந்து பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நகைகள், பணம் திருடுப் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் துறையினர், தடவியல் நிபுணர் ரகோத்தமன் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவம் நடந்த பகுதியைப் பார்வையிட்டனர்.
நள்ளிரவில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடிவருகின்றனர்.