தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளை கடத்துவது வாடிக்கையாகி வருகிறது. சட்டவிரோதமாக தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்குப் பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், கடத்தல் செயலை தடுக்கவும், கடலோர காவல் படையினர் தொடர் ரோந்து சென்று வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஆதேஷ் ரோந்து கப்பலில், இந்திய கடலோர காவல் படையினர் கடலுக்குள் ரோந்து சென்றனர். அப்போது, நடுக்கடலில் 5 பண்டல்கள் கடல் நீரில் மிதந்து கொண்டிருந்தன.
இதைக் கண்டு சந்தேகமடைந்த கடலோர காவல்படையினர் அவற்றை மீட்டு சோதனை செய்து பார்த்தபோது அவை பீடி இலைகள் என்பது தெரியவந்தன. நடுக்கடலில் மிதந்து கொண்டிருந்த சுமார் 250 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டன.
விசாரணையில் தூத்துக்குடியிலிருந்து பீடி இலை பண்டல்களை இலங்கைக்கு கடத்திச் செல்லும் பொழுது கடலுக்குள் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை பண்டல்களை கடலோரக் காவல்படையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் கடலோர காவல்படை டிஐஜி அரவிந்த் ஷர்மா உத்தரவின் பேரில் அவை சுங்கவரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மியாவாக்கி முறையில் மரங்கள்: அசத்தும் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர்