ஆடவருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை போலவே, மகளிருக்கான இந்தத் தொடர் ஐசிசியால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2021ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் ஜனவரி 30ஆம் தேதி தொடங்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது. இதன்மூலம், நியூசிலாந்தில் 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தத்தொடர் நடைபெறவுள்ளது.
மொத்தம் எட்டு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. இதில், தரவரிசைப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் இந்தத் தொடருக்கு முன்னேறும். அதேசமயம், தொடரை நடத்தும் நாடு என்பதால் நியூசிலாந்து அணி நேரடியாக உலகக்கோப்பையில் பங்கேற்கிறது. ஏனைய மூன்று இடங்களை பிடிப்பதற்கான தகுதிச் சுற்று போட்டி நடைபெறும் என்றும் அதில் வெற்றிபெறும் அணி இந்தத்தொடரில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எட்டு அணிகள், 31 போட்டிகள் என இந்தத் தொடர் ஜனவரி 30ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போதைய தரவரிசை நிலவரப்படி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளன. கடந்த முறை 2017இல் இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தத் தொடரில், இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.