கோவை மாவட்டத்தில் 185 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டுவருகின்றன. பரவிவரும் கரோனா தொற்று காரணமாக அனைத்து மதுபான கடைகளும் அரசின் மறு உத்தரவு வரும்வரை நேரக் குறைப்போடு இயங்கிவருகின்றன.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி கள்ளத்தனமாக மது விற்பனையில் சிலர் ஈடுபட்டும் வருகின்றனர். இதைக் காவல் துறையினர் தடுக்கும் செயல்களும் நடைபெற்றுவருகின்றன. மேலும் சில இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி அருகே வஞ்சியபுரம் பிரிவு வாய்க்கால் மேட்டில் செயல்பட்டுவரும் அரசு மதுபான (கடை எண் 1851) கடையில் சுவரில் ராட்சச துளையிட்டு ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள மது கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு கடையின் மதுபான இருப்பு, அன்றாட கணக்கு வழக்குகளைச் சரிபார்த்து முடித்து, கடையை பூட்டிவிட்டுச் சென்ற டாஸ்மாக் ஊழியர்கள் வழக்கம்போல இன்று காலை கடையைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடையின் பின்பக்க சுவரில் ராட்சச துளையிடப்பட்டு இருந்ததும், கடைக்குள் இருந்த மதுபானங்கள் காணாமல் போயிருந்ததும் அவர்களுக்குத் தெரியவந்தது.
இது குறித்து கடையின் ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, அங்கு விரைந்துவந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.
அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த கோவை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்தையா கொள்ளைச் சம்பவம் குறித்து ஊழியர்களிடம் விசாரித்துவருகின்றார்.
கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற அரசு டாஸ்மாக் கடையிலிருந்து 1090 குவார்ட்டர் பாட்டில்கள், 130 ஆஃப் பாட்டில்கள், 30 புல் பாட்டில்கள் என ரூபாய் இரண்டரை லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
கடையின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அரசு மதுபான கடைகளில் கொள்ளைபோகும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால், இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அலுவலர்கள் கூறிவருகின்றனர்.
இதனால், டாஸ்மாக் கடைகளுக்கு இரவு நேரத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.