தேனி மாவட்டத்தில் இதுவரை 161 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் போடியைச் சேர்ந்த 53 வயது பெண், ஓடைப்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் என இருவர் உயிரிழந்தனர். 115 நபர்கள் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 44 பேர் தேனி, பெரியகுளம், கம்பம், மதுரை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவற்றில் அதிகபட்சமாக பெரியகுளம் பகுதியில் 19 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெரியகுளம் நகராட்சி, தென்கரையில் உள்ள ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவருக்கு அண்மையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், சென்னை உள்பட பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என மொத்தம் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மேலும், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, கைலாசப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் நான்கு பேருக்கும் தொற்று உறுதியானதால், பெரியகுளம் தாலுகாவில் மட்டும் தற்போது 19 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில், 22ஆவது வார்டில் மட்டும் 12 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பெரியகுளம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, வெளி நபர்கள் உள்ளே செல்லாதவாறு முடக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் செயல்பட்டுவந்த கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. நகராட்சி ஊழியர்கள், சுகாதாரத் துறையினர் ஆகியோர் தினமும் கிருமிநாசினி தெளித்து, குடியிருப்புப் பகுதிகள்தோறும் சுத்தம்செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க : கஞ்சா கடத்திய பெண் உள்பட 5 பேர் கைது!