ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தில் அமைந்துள்ள தலவக்கா என்ற இடத்தில், ராணுவத்தினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து ஆப்கானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஆறு பேர் காயமடைந்தனர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த தாக்குதலில், தலிபான் பயங்கரவாதிகள் அந்த இடத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டதாக ராணுவ உயர் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின், அக்சா மாவட்டத்தில் அமைத்துள்ள ராணுவ முகாமில் தலிபான்கள் நடத்திய மற்றொரு தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும், ஐந்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தலிபான் பயங்கரவாதிகள், நாட்டின் முக்கிய மாகாணங்களைக் கைப்பற்றி தங்களது நிலைகளைப் பலப்படுத்த முயற்சித்துவருவதால் ராணுவத்தினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான தாக்குதல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றுவருகின்றன.