திருவாரூர் மாவட்டத்தில், கரோனாவால் பாதிக்கப்பட்ட 32 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், சென்னையில் கரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், சென்னையில் பணிபுரிந்து வந்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.
இதன் காரணமாக வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களை சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிர பரிசோதனை செய்கின்றனர். அதனால், திருவாரூரில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்னதாக, திருவாரூரில் கரோனாவால் 86 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், திருவாரூர் அருகே குறிஞ்சி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் உறவினர்களின் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, அங்கு சென்னையில் இருந்து வந்தவர்கள் மூலமாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் குறிஞ்சி நகர் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கூடுர் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி, கூத்தனூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர், பெங்களூரு குடவாசல், அந்தமானிலிருந்து மன்னார்குடி வந்த இருவர் உள்பட 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், திருவாரூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது. இதில், 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 51 பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.