புதுக்கோட்டை மாவட்டம், கணேஷ் நகர் ஐந்தாம் வீட்டில் வசிப்பவர் காவிரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து சென்று தன் 12 வயது மகளுடன் தனியாக வசித்துவந்தார்.
12 வயது சிறுமி புதுக்கோட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்த நிலையில், நேற்று சிறுமி வீட்டில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.
இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது தொடர்பாக, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுமியின் தாயுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்த கணேசன் என்பவர் சிறுமிக்கு குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, காவல் துறையினர் கணேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.