கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, இன்று (செப்.23) காலமானார்.
65 வயதான சுரேஷ் அங்காடி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தின் பெலகாவி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான அங்காடி, இந்தத் தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 11ஆம் தேதி தனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அங்காடி, மருத்துவர்களின் உரிய ஆலோசனைகளைப் பெற்று தான் நலமுடன் இருந்து வருவதாக முன்னதாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நோய் தொற்று பாதிப்பு தீவிரமடைந்ததன் விளைவாக தற்போது அவர் உயிரிழந்துள்ளார். கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த முதல் மத்திய அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கரோனா பாதிப்பின் காரணமாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்திலிருந்து கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் இரண்டாவது நாடாளுமன்ற உறுப்பினர் இவர் ஆவார்.
அங்காடியின் மறைவுக்கு ஆறு மணிநேரத்திற்கு முன்னதாக அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் ட்வீட்டுகள் ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளன.
அங்காடியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் பிரதமர் தேவகௌடா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.